×

தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடுவதை தடுக்க வங்கி மூலம் முட்டுக்கட்டை போடும் ஒன்றிய அரசு: தேர்தல் முடியும் வரை அவகாசம் கோருவது உச்சநீதிமன்றத்தையும், மக்களையும் ஏமாற்றும் செயல்: தலைவர்கள் கடும் கண்டனம்

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் என்ற மோசடி திட்டத்தின் முக்கிய பங்காளியான பாஜ, சந்தேக பரிவர்த்தனைகளை மறைக்க வங்கியை கேடயமாக்குவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட தேர்தல் முடியும் வரை பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கோரியிருப்பது உச்சநீதிமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றும் செயல் என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15ம் தேதி, “ஒன்றிய பாஜ அரசால் கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.

அதை ரத்து செய்கிறோம். மேலும் பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் தீர்ப்பு வரும் வரை (பிப்.15) விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள், அதை வாங்கியோர், பெற்றவர்கள் விவரங்களை மார்ச் 6ம் தேதிக்குள் (நேற்று) தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஒப்படைக்க வேண்டும். தொடர்ந்து 13ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வௌியிட வேண்டும்” என உத்தரவு பிறப்பித்திருந்தது.

பாரத ஸ்டேட் வங்கிக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், நேற்று முன்தினம் பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க ஜூன் 30ம் தேதி வரை காலஅவகாசம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தது. வரும் ஜூன் 16ம் தேதியுடன் மோடி தலைமையிலான பாஜ அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் அதற்கு முன் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கி காலஅவகாசம் கோரியிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, “தேர்தல் பத்திர திட்டம் வௌிப்படைத்தன்மையற்ற, ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதில் காங்கிரஸ் தௌிவாக உள்ளது. தேர்தல் பத்திர மோசடி திட்டத்தின் முக்கிய பயனாளி மோடி அரசு. தேர்தல் பத்திரம் பெற்ற பாஜவின் கூட்டாளிகளுக்கு விமான நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலை, மின்உற்பத்தி நிலையங்கள் போன்ற ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளன. நன்கொடை அளித்தவர்களின் 44,434 தானியங்கி தரவுகளை வெறும் 24 மணி நேரத்தில் வௌியிட்டு, அதனை பொருத்தியும் பார்க்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த தகவல்களை சேகரிக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் ஏன் கூடுதலாக 4 மாதங்கள் தேவைப்படுகிறது.

மோடி அரசு, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம் அனைத்தும் பாஜவின் கஜானாவை நிரப்புவதற்காக, தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்தையும் எல்லா வகையிலும் அழிக்க நினைக்கிறது. தற்போது தேர்தல் தோல்வி பயத்தில், விரக்தியில் உள்ள மோடி அரசு, பாரத ஸ்டேட் வங்கியை கேடயமாக பயன்படுத்தி, தேர்தல் பத்திரம் தொடர்பான சந்தேக பரிவர்த்தனைகளை மூடி மறைக்க முயற்சி செய்கிறது” என்று கடுமையாக சாடி உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் டிவிட்டர் பதிவில், “தேர்தல் பத்திர விவரங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்வது அவர்களின் உரிமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்த பிறகும், தேர்தலுக்கு முன்
அதை வௌியிட வங்கி ஏன் விரும்பவில்லை? நன்கொடை வணிகம் குறித்த விவரங்களை மறைக்க மோடி தன் மொத்த படையையும் பயன்படுத்த நினைக்கிறார். கணினியில் ஒரு கிளிக் செய்து திரட்டக்கூடிய தகவல்களை தாக்கல் செய்ய ஜுன் 30 வரை அவகாசம் கேட்பது பருப்பில் கருப்பு என்பதை விட மொத்த பருப்புமே (தேர்தல் பத்திரங்கள்) கருப்பு என்பதை உணர்த்துகிறது” என்று கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.

தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடுவதை தடுக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கடுமையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா வெளியிட்ட அறிக்கை:
இந்திய அரசியல் சாசனத்தின்படி உருவாக்கப்பட்ட அமைப்பான ரிசர்வ் வங்கிக்கு, அதன் துணை நிறுவனமான இந்திய ஸ்டேட் வங்கியை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டிய பொறுப்புள்ளது. மார்ச் 6க்குள் (இன்று) தரவுகளை சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது, ஆனால், அது ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் கோருகிறது.

வங்கியில் அனைத்து பண பரிமாற்றங்களும் டிஜிட்டல் வழியாகவே நடைபெறுகின்றன. முன்பு போல் பதிவேடுகளில், கையால் எழுதப்படுவது இல்லை. தேர்தல் பத்திர பண பரிமாற்றம் தொடர்பான விவரங்களை ஒரு நாளில் அல்ல, சில நிமிடங்களில் திறந்து பார்த்து விட முடியும். நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை, எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை தேர்தல் பத்திரம் மூலம் வந்தது என்பதை, நாட்டுக்குத் தெரிவிக்காமலேயே மறைக்கும் முயற்சியே இது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளுங்கட்சியான பாஜ மொத்த தேர்தல் பத்திரங்களில் 55 சதவீதத்தை பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் குஜராத்தைச் சேர்ந்தவர். அவர் மோடி சொல்வதற்கெல்லாம் ஆமாம் போடுபவர் என்று நன்கு அறியப்பட்டவர்.

ரிசர்வ் வங்கி தலைவரின் அனுமதியின்றி, இந்திய ஸ்டேட் வங்கி கால அவகாசம் கோரி நீதித்துறையின் கதவுகளைத் தட்ட முடியுமா? இந்திய உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்புகளை வழங்கினாலும், அரசியல் சாசன அமைப்புகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யவே முயற்சிக்கின்றன. எனவே, பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாகத் தலையிட்டு, தரவுகளை சமர்ப்பிப்பதில் கால அவகாசத்தை நீட்டிக்க கோரும் மனுவை திரும்பப் பெற இந்திய ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில், பிரதமர் மவுனம் காப்பதின் பொருள் என்ன என மக்கள் புரிந்துகொள்வார்கள் என கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் ஏமாற்று நாடகத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் 5 பேர் அடங்கிய அரசமைப்பு சட்ட அமர்வு, தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. தேர்தல் பத்திரம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது, வாக்காளர்கள் தகவல் அறியும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக நடைமுறையையும், வெளிப்படையான சுதந்திரமான தேர்தலையும் பாதிக்கக் கூடியது என்பது தீர்ப்பின் உள்ளடக்கம். பாஜ இதற்கு முன்பும், அரசமைப்பு சட்ட அமர்வு வழங்கிய டெல்லி அரசின் அதிகாரம் குறித்த தீர்ப்பையும், தேர்தல் ஆணையர்கள் நியமன தீர்ப்பையும் சட்டம் போட்டு ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.

எனவே, நீதிமன்றத்தை கிள்ளுக்கீரையாக கூட மதிப்பதில்லை என்கிற பாஜவின் ஆணவம் வெளிப்பட்டுள்ளது. இதற்கு சுயேச்சை அமைப்பான பாரத ஸ்டேட் வங்கி தலைமை துணை போயிருப்பது வெட்கக்கேடான செயல். உச்ச நீதிமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றுகிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்த வேண்டும். அத்துடன், பாரத ஸ்டேட் வங்கியின் கோரிக்கையை நிராகரித்து, உடனடியாக விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

* நன்கொடை அளித்தவர்களின் 44,434 தரவுகளை வெறும் 24 மணி நேரத்தில் வௌியிடலாம்.
* மோடி அரசு, பாரத ஸ்டேட் வங்கியை கேடயமாக பயன்படுத்தி, தேர்தல் பத்திரம் தொடர்பான சந்தேக பரிவர்த்தனைகளை மூடி மறைக்க முயற்சி செய்கிறது.
* சுயேச்சை அமைப்பான ஸ்டேட் வங்கி பாஜவுக்கு துணை போயிருப்பது வெட்கக்கேடான செயல்.

The post தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடுவதை தடுக்க வங்கி மூலம் முட்டுக்கட்டை போடும் ஒன்றிய அரசு: தேர்தல் முடியும் வரை அவகாசம் கோருவது உச்சநீதிமன்றத்தையும், மக்களையும் ஏமாற்றும் செயல்: தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EU government ,Supreme Court ,New Delhi ,Baja ,State Bank of India ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...